மத்திய அமைச்சரவையில் மாற்றம்; தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்க வாய்ப்பு; பெண்கள் பட்டியலில் தமிழக பாஜகவினருக்கும் இணை அமைச்சர் பதவி..?
Dharmendra Pradhan likely to be given another portfolio in the central cabinet
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனத்கூறப்படுகிறது. அத்துடன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்கு சிஜேபியினர் போராட்டத்திற்கு பின்னர் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் சிலரை புதிதாக அமைச்சரவையில் சேர்க்கவும் சிலரை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்து கட்சிப் பணிக்கு அனுப்பவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என்று தெரிகிறது. தற்போது இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமான கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய இலாகா மாற்றப்படாது என்று கூறப்படுகிறது.

தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவருக்கு வேறொரு துறைக்கு மத்திய அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜுவின் அறைக்கு அருகிலேயே இவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய அறை கேபினெட் அமைச்சர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மத்திய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் அல்கா குர்ஜர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. பெண்கள் பட்டியலில் தமிழக பாஜகவினருக்கும் இணை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேப்போன்று தென்னிந்தியாவுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற புகார் உள்ள நிலையில், தற்போது சுமார் 10 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் மூவர் கேபினெட் அமைச்சர்கள், ஏழு பேர் இணை அமைச்சர்கள் ஆவர். எனவே, கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஏற்கப்படவுள்ளது.

அடுத்து,பீஹாரின் எல்ஜேபி தலைவரும் மத்திய உணவு அமைச்சருமான சிராக் பாஸ்வான், தனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைச்சகத்தைக் கோருகிறார். மகாராஷ்டிராவில், 13 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பும், அமைச்சரவையில் கூடுதலாக ஒரு இடம் கோரி வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸுடன் ஆலோசனை செய்துள்ளார். அதன்படி, சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய கட்சிகளின் இரு பிரிவுகள் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவான தீர்வு காண்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க முடிவு செய்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.
English Summary
Dharmendra Pradhan likely to be given another portfolio in the central cabinet