“இருக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தால் நடவடிக்கை”.. சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி எச்சரிக்கை!
Action will be taken if members leave their seats and run forward Speaker jcd Prabhakar issues a stern warning in the Assembly
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்ற நிலையில், அவையின் மாண்பை காப்பாற்றும் வகையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் கூட நேரலையில் ஒளிபரப்பாகி சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பரவி வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆளுங்கட்சியினர் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், பின்னர் அவை குறிப்பில் இருந்து அவற்றை நீக்குவதாகவும் அவர் விமர்சித்தார். சட்டப்பேரவையில் பாடல்கள் பாடப்படுவதைக் குறிப்பிட்டு, “சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா?” என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். திமுக ஆட்சியில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படவில்லை என்றும், தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜனநாயகத்தை காக்கும் வகையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை முதன்முதலில் நேரலை செய்தது திமுகதான் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அவையில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் அளித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது அவையின் மரபு என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவையின் மாண்பைக் குறைக்கும் கருத்துகளை தொடர்ந்து நீக்குவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், “இது போகிற போக்கில் அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல. இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும்” என்று சபாநாயகர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் நேரடியாக மோதலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கடுமையான எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.
“சட்டமன்றத்தில் இருக்கையை விட்டு எழுந்து, கையை உயர்த்திக்கொண்டு யார் முன்னோக்கி ஓடி வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் சட்டப்பேரவையில் அவையின் ஒழுங்கு மற்றும் மாண்பை பாதுகாப்பதில் சபாநாயகர் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெளிவாகியுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதாரங்களுடன் மட்டுமே பேச வேண்டும் என்றும், அவையின் கண்ணியத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
English Summary
Action will be taken if members leave their seats and run forward Speaker jcd Prabhakar issues a stern warning in the Assembly