ஓபிஎஸ்-ன் திடீர் விசிட்! பின்னணியில் பாஜக? தாமரையில் நிழலில் ஓ.பி.ஆர்! பரபரப்பான அரசியல் களம்
Rajinikanth meeting with OPS has created sensation in political
அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கிலும் ஓபிஎஸ்-க்கு பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

ஆனால் ஓபிஎஸ்-ஐ முந்தி கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஏற்கனவே அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை திடீர் என சந்தித்துள்ளார். ஜெயிலர் படபிடிப்பு நிறைவடைந்த பிறகு இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாஜி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்திருந்தார்.

இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட பிறகு டெல்லி பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாஜக தலைவர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இதனால் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து ஓபிஎஸ் அணி பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலையில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற நிலையில் உட்கட்சி பிரச்சனையின் போது அவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அவர் மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை.

அதே வேளையில் டெல்லி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அவர் பாஜக சார்பாக தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்குக்கு பிறகு ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ரஜினியை சந்தித்து இருப்பதன் பின்னணியில் பாஜக உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது. அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு அதிலிருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Rajinikanth meeting with OPS has created sensation in political