நாளை முதல்வராக விஜய் பதவியேற்பு; விழாவில் பங்கேற்க சென்னை வரும் ராகுல் காந்தி..!
Rahul Gandhi to participate in Vijay swearing in ceremony as Chief Minister tomorrow
பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் நாளை தமிழக முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும்,ஆட்சியமைக்க தேவையான 118 என்று பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்தது.
இதையடுத்து, ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. அதன்படி, த.வெ.க.வின் அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக ஆதரவு தெரிவித்தன.

நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய நிலையில், த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்தது இதனையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்த விஜய், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அப்போது, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை ஆளுநரிடம் வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், த.வெ.க. தலைமையிலான அரசு நாளை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக உத்தோயோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில், விஜய்யின் பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார்.
இதற்காக நாளை காலை 08.30 மணியளவில் அவர் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 1967-க்கு பிறகு, த.வெ.க.வின் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற உள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவுள்ளது.
English Summary
Rahul Gandhi to participate in Vijay swearing in ceremony as Chief Minister tomorrow