“மாணவர்களைக் கண்டு அமைப்பு அஞ்சுகிறது!”: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பதிலடி!
Rahul Gandhi Slams System During Student Interaction in Indore MP CM Mohan Yadav Hits Back
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, 'சத்ரோன் கி கூஞ்ச்' (Chhatron ki Goonj) என்ற அமைப்பின் கீழ் நாடு முழுவதும் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்து மாணவர்கள் பல கேள்விகளைத் தன்னிடம் எழுப்பியதாகக் குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, அமித் ஷாவின் மகன் கிரிக்கெட் வாரியத் தலைவரானது, நாட்டின் வணிகச் சூழல் இரண்டு தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது, மற்றும் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியதாகக் கூறினார். கேள்வி கேட்கும் மனப்பான்மை கொண்ட மாணவர்களைக் கண்டு தற்போதைய அமைப்பு (System) அஞ்சுகதாகவும், அதனால் கேள்வி கேட்காத 'குருட்டு விசுவாசிகளை' மட்டுமே அது உருவாக்க விரும்புவதாகவும் அவர் சாடினார்.
ராகுல் காந்தியின் இக்குற்றச்சாட்டுகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் காட்டமாகப் பதிலளித்துள்ளார். போதிய தயாரிப்பும் உண்மையான தகவல்களும் இன்றிப் பேசியதன் மூலம் ராகுல் காந்தி தான் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த காலத்தில் இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறிவிட்டதாகக் கூறிய முதல்வர், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் நிலை மோசமாக இருந்ததாகவும், மாநிலத்தில் ஒரு விமான நிலையத்தைக்கூடக் காங்கிரஸ் அரசு அமைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
English Summary
Rahul Gandhi Slams System During Student Interaction in Indore MP CM Mohan Yadav Hits Back