என்.எல்.சி. விவகாரத்தில், முதல்வர் தலைமையிலான குழுவின் உறுப்பினரே எதிர்ப்பு! தமிழக அரசுக்கு உண்டாகும் நெருக்கடி!  - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் செயல்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவின் முதல் கூட்டம் இந்த மாதம் 3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன் இக்குழுவின் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் சுந்தர்ராஜன் என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களால் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏராளம். இந்த நிலையில் மீண்டும் சுரங்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதும் அப்பாவி மக்களை  காவல்துறையை ஏவி அடக்குவதும் கண்டனத்திற்குரியது. 

நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு, நிரந்தர வேலை என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயமால் என்.எல்.சி. விரிவாக்கத்தைத் தொடர்வதும் அதற்கு தமிழ்நாடு அரசு துணைபோவதும் ஜனநாயக விரோதமானது.


 
2070ம் ஆண்டுக்கு முன்பாக பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதாக இலக்கு நிர்ணயித்துள்ள இந்திய அரசு அதற்கு நேர்மாறாக நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டுவது காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"உலகமே கைவிட்டுக் கொண்டிருக்கும் பழுப்புநிலக்கரி சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவேண்டிய தேவை ஏன்?  முதல்வரே இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோருகிறோம். 

நெய்வேலியில் புதிதாக சுரங்கம் அமைப்பதற்கு அனுமதிப்பது தமிழ்நாடு அரசு ஏற்கனவே எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு எதிராகதான் அமையும். கைவிடக் கோருகிறோம்" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக போராட்டம் நடத்தி வரும் சூழலில், முதல்வர் அமைத்த குழுவில் உறுப்பினராக இருப்பவரே எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

poovulagin sundararajan oppose tn Govt activity in NLC land acquisition


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->