பாமக நிர்வாகி தருமபுரி பச்சமுத்து மறைவு - டாக்டர் இராமதாஸ் இரங்கல்!
PMK Dharmapuri pachamuthu death
பாமக நிர்வாகி தருமபுரி பச்சமுத்து மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த இரங்கல் செய்தியில், "தருமபுரி மேற்கு மாவட்டம் கடகத்தூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் , வேதனையும் அடைந்தேன்.
கடகத்தூர் பச்சமுத்துவை நான் நன்றாக அறிவேன். என் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். இளம் வயதிலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட பச்சமுத்து, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்தார்.
கட்சித் தலைமை சார்பில் வழங்கப்படும் பணிகளை கட்டளைகளாக மதித்து செயல்படுத்தி முடிப்பார். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்களை தருமபுரி மாவட்டத்தில் முதலில் எழுதியவர் பச்சமுத்து தான்.
பாட்டாளி மக்கள் கட்சியிலும், பொது வாழ்க்கையிலும் உயர்ந்த இடங்களை பச்சமுத்து அடைவதற்கான வாய்ப்புகள் ஏராளமான இருந்தன. ஆனால், மிகவும் இளம்வயதில் அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பச்சமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
PMK Dharmapuri pachamuthu death