13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை  விரைந்து அமைக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  சுமார் 13 லட்சம் நெல் மூட்டைகள் கடந்த சில நாள்களில்  பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன.  அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன.  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தை அடுத்த இராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன.

மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு  சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  சேதமடைகின்றன.

இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட  கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில்  வெறும் 15% மட்டும் தான். இது போதுமானதல்ல.

மழையில் நனைந்து சேதமடைந்த  நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss condemn to tvk govt paddy rain issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->