'ஸ்டாலின் தியாகத்தை கொச்சைப்படுத்திய விஜய்'...! - குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட பின் எ.வ.வேலு ஆவேச பேட்டி...!
Vijay insulted Stalin sacrifice EV Velu furious interview after being expelled
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட அமளியில், அக்கட்சி உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. கொறடா எ.வ.வேலு, சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் தி.மு.க. தொடர்பான அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் மற்றும் மிசா காலம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் பேசியிருந்தார்.நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் பேசுவது விதிகளுக்கு முரணானது என்றும், எனவே முதல்-அமைச்சர் பேசிய குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.தொடர்ந்து ஏற்பட்ட அமளியை அடுத்து, தி.மு.க. உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகத்தில் தி.மு.க.வினர் செய்தியாளர்களை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை விளக்கினர்.அப்போது எ.வ.வேலு கூறியதாவது,"எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் இருக்கும்போது, அந்த வழக்குகள் குறித்து சட்டசபையில் விவாதிப்பது முறையானது அல்ல.
ஆனால், முதல்-அமைச்சர் விஜய் சட்டசபை விதிகளுக்கு மாறாக அமலாக்கத்துறை வழக்கு, மிசா காலம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். சர்க்காரியா ஆணையம் தொடர்பாகவும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.அமலாக்கத்துறை அறிக்கையை படித்துவிட்டு முதல்-அமைச்சர் மிசா குறித்து பேசும்போது, உடல் மொழியையும் பயன்படுத்தினார். மு.க.ஸ்டாலின் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பேசியுள்ளார்.
இதன் காரணமாகவே அவர் பேசிய கருத்துகளை சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம்.ஆனால், எங்களது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததுடன், அவைக் காவலர்களை வரவழைத்து எங்களை வெளியேற்றியுள்ளனர்.
இதுவரை சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட்டு வந்தார். ஆனால், இன்று அவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார்.சட்டசபையில் ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது.
தி.மு.க. நடத்தியது உண்மையான ஆட்சி. இப்போது நடைபெறுவது காட்சிக்கான ஆட்சி” என்று எ.வ.வேலு தெரிவித்தார்.சட்டசபைக்குள் ஏற்பட்ட அமளி, உறுப்பினர்கள் வெளியேற்றம் மற்றும் அதைத்தொடர்ந்து எ.வ.வேலு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Vijay insulted Stalin sacrifice EV Velu furious interview after being expelled