முதல்வர் விஜய் உரையை நீக்க முடியாது என சபாநாயகர் மறுப்பு..! தரையில் அமர்ந்து தர்ணா செய்த திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்...!
Speaker refuses remove CM Vijay speech DMK members who sat ground and staged sit in protest were evicted bomb
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சரின் முந்தைய நாள் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால், அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் உத்தரவின்பேரில் அவைக் காவலர்கள் சில தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது தி.மு.க. கொறடா எ.வ.வேலு பேசினார்.அவர் கூறுகையில், "என்னுடைய சட்டமன்ற அனுபவத்தில் பல முதல்-அமைச்சர்களை பார்த்திருக்கிறேன்.
அவர்கள் அனைவரும் கண்ணியமான முறையிலேயே அவையில் உரையாற்றியுள்ளனர். ஆனால், நேற்று முதல்-அமைச்சர் பேசியபோது நாங்கள் 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம்.நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் அவையில் பேசியுள்ளார். இதே மன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்ட சர்க்காரியா அறிக்கை குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆதாரமில்லாத தகவல்களை முதல்-அமைச்சர் முன்வைத்துள்ளார்.

எனவே, காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான தகவல்களைத் தவிர, மிசா மற்றும் மாறன் தொடர்பாக முதல்-அமைச்சர் பேசியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.இதற்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்.அவர் பேசுகையில், "சர்க்காரியா ஆணையம் தொடர்பான வழக்கை பற்றித்தான் முதல்-அமைச்சர் அவையில் குறிப்பிட்டார். கலைஞர் நிதி பெற்றதாகக் கூறப்படும் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
சர்க்காரியா ஆணையம் சுட்டிக்காட்டிய 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.மிசா காலத்தில் வழிப்பறி, கொலை, திருட்டு, பெண்கள் தொடர்பான வழக்குகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிசாவில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரே காரணத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று கூற முடியாது.
இந்திரா காந்தியை அவதூறாக பேசியதன் காரணமாகவே ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்திரா காந்தியிடம் 21 அம்சத் திட்டம் இருப்பதாக ஸ்டாலின் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அவர் மிசா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும், குறிப்பும் இல்லை" என்றார்.
இதையடுத்து, முதல்-அமைச்சர் முந்தைய நாள் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.ஆனால், முதல்-அமைச்சர் பேசியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.பின்னர் தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சட்டசபையில் பரபரப்பான சூழல் உருவானது.
சபாநாயகர் இருக்கையைச் சுற்றி நின்று தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.இதையடுத்து அவைக் காவலர்கள் உடனடியாக சபைக்குள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சில உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சட்டசபைக்கு வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Speaker refuses remove CM Vijay speech DMK members who sat ground and staged sit in protest were evicted bomb