வார்டு எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் முடியவில்லையா...? உள்ளாட்சி தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை மாவட்டத்திலும் அந்த தேர்தல் நடைபெறவில்லை.இந்த நிலையில், 27 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி நிறைவடைந்தது.

பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது.அவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை 3-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நிர்வாகப் பணிகளில் இடையூறு ஏற்படாத வகையில், தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்பிறகும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடையாததால், அவர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மீண்டும் நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதில், வார்டு எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.

வார்டு எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகள் முடிவடையாததால் தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை வருகிற அக்டோபர் 19-ந் தேதி வரையிலோ அல்லது உள்ளாட்சி தேர்தல் முடிந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் வரையிலோ நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஊராட்சிகள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.வார்டு எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பிறகே உள்ளாட்சி தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகமெடுக்கும். தனி அலுவலர்களின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காலம் மேலும் நீளும் சூழல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ward boundary redefinition and reservation work not completed Important information released regarding local government elections


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->