குற்றம்சாட்டப்பட்டவரிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை...! - செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கெத்து...!
There is no need to ask the accused Tamil Nadu government moves Supreme Court Senthil Balaji case
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கே உள்ளது என்றும், அந்த நியமனத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகார்கள் தொடர்பான வழக்குகளில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வாஷிங்டன் தனசேகரன் பணியாற்றி வந்தார்.பின்னர் அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வி.செந்தில் முருகன் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவதற்கு செந்தில் பாலாஜிக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று தமிழ்நாடு அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.அரசின் சார்பில் வழக்கை நடத்தி, அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார்.
குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக செயல்படுவதற்காக அரசு தரப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுவதில்லை. எனவே, அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அல்லது மாற்றும் நடவடிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உரிமை கோர முடியாது என தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
வி.செந்தில் முருகன் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விவரங்களும் பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான முழு அதிகாரமும் அரசுக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சிறப்பு வழக்கறிஞர் நியமன விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் அல்லது ஆலோசனை அவசியமில்லை என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
There is no need to ask the accused Tamil Nadu government moves Supreme Court Senthil Balaji case