என்னதான் நடக்கும் பார்க்கட்டுமே என இருந்தார் இபிஎஸ்...! சட்டமன்ற ரகளையின் போது சபாநாயகர் தெரிவித்த சுவாரஸ்ய கருத்து...!
EPS was like let see what happens interesting comment made by Speaker during Assembly session
தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய சர்காரியா அறிக்கை தொடர்பான கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய் சர்காரியா அறிக்கை குறித்து பேசியிருந்தார். இந்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது முடிவை தெரிவித்தார். முதல்-அமைச்சரின் பதிலுரையில் இடம்பெற்ற குறிப்பிட்ட கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவற்றை நீக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள், அவரது இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் உருவானது.
அமளி தொடர்ந்து நீடித்த நிலையில், தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.இதையடுத்து அவைக் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
இதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது,“தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு நான் அனுமதி அளித்ததுதான் நான் செய்த தவறா?சட்டசபையை தொடர்ந்து நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தி.மு.க.வினரிடம் இருப்பதாக தெரிகிறது.அவையின் மாண்பும், அதன் கண்ணியமும் தான் எனக்கு முக்கியம். தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றியதை நான் தவறாக கருதவில்லை.பிற்பகல் 1.30 மணிக்குள் சட்டசபை அலுவல்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
அவையை முடிக்கவிடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?
முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கான காரணத்தையும் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துவிட்டேன்.த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்து அவை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
என்னதான் நடக்கும், நடக்கட்டுமே என்று பார்த்துக்கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” என்று சபாநாயகர் தெரிவித்தார்.சபாநாயகரின் இந்த கருத்துகளை தொடர்ந்து, சட்டசபையில் நிலவிய பரபரப்பு அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
EPS was like let see what happens interesting comment made by Speaker during Assembly session