சட்டசபை ஒப்புதலின்றி ரூ.2,000 கோடி நிதிப் பொறுப்பா...? திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை போட்டுத் தாக்கிய ஆதவ் அர்ஜுனா...!
2000 crore financial responsibility without approval assembly Adhav Arjuna attacked former DMK minister EV Velu
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெறுகிறது. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் தொடர்பாக தெரிவித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன. அப்போது எழுந்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது,"சட்டசபையின் உரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
தமிழ்நாடு சட்டசபை விதிகளின்படி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு, கடந்த ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, 2026-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மூலம், 2026-27-ம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை, 2026-27-ம் ஆண்டுக்கான மொத்த திட்ட ஒதுக்கீட்டில் பின்னர் சரிசெய்யப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த காலகட்டத்திற்கான மானியக் கோரிக்கைகள் சட்டசபையில் வாக்கெடுப்பின் மூலம் அப்போது நிறைவேற்றப்படவில்லை.
இருப்பினும், இந்த 80 பணிகளுக்கும் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025-26-ம் நிதியாண்டிலேயே பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம், எதிர்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை அடிப்படையாகக் கொண்டு ரூ.2,000 கோடிக்கான நிதிப் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சட்டசபையின் முன் ஒப்புதல் பெறாமல் இவ்வாறு பணிகளுக்கு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொண்டிருப்பது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானதாகும்.
சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பே ரூ.2,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டசபையில் ஒப்புதல் பெறாமலேயே, எதிர்கால நிதிநிலை அறிக்கையில் இந்தத் தொகை ஒதுக்கப்படும் என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொண்டிருப்பது, மானியக் கோரிக்கைகளை பரிசீலித்து அனுமதி வழங்கும் சட்டசபையின் அதிகாரத்தை நடைமுறையில் பாதித்துள்ளது.
எனவே, இந்த பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பான அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்வதற்காக சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
English Summary
2000 crore financial responsibility without approval assembly Adhav Arjuna attacked former DMK minister EV Velu