திமுக அரசின் துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


 

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் நாற்றம் வீசுகிறது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய இரு மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தில்லி எம்.எஸ்.டபிள்யூ  சொலுஷன்ஸ் லிமிடெட் (Delhi MSW Solutions Ltd) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மண்டலங்களிலும் 5180 தூய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் நிரந்தரப் பணியாளர்கள் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் தூய்மைப் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள தில்லி எம்.எஸ்.டபிள்யூ  சொலுஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதைக் கண்டித்து தான் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒருபுறம் இதுவரை சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்னொருபுறம் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை  எடுத்துள்ள நிறுவனம், இன்னும் அதன் பணியைத் தொடங்கவில்லை. அந்த நிறுவனத்தில் தூய்மைப் பணிகளை செய்ய போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் சேரவில்லை. அதனால், 7 நாள்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாததால், முகப்பேர், நொளம்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், பெரம்பூர் நெடுஞ்சாலை, சூளை மெயின் ரோடு, சாந்தி காலனி 4வது அவென்யூ மற்றும் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் சாலையிலும் குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களில் கொளத்தூர் தொகுதியின் பல பகுதிகளும் இப்போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெருவெங்கும் குப்பைகள் மலை போல குவிந்து கிடப்பதால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சிக்கலின் தீவிரத்தை முற்றிலும் உணராத சென்னை மாநகராட்சி, ரூ.2,300 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தால் தாங்கள் எந்த வகையில் பயனடையலாம்  என்று கணக்குப் போடுவதில் தான் தீவிரம் காட்டி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்றாலும் கூட, அவற்றை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு முன்வரவில்லை.

தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த போது, அவர்களுக்கு தினமும் ரூ.700 வீதம் மாதம் ரூ.21,000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிக்கு சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.15,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படும். அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள். அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானது அல்ல.

அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள் இனியும் ஒப்பந்தப் பணியாளர்களாகவே பணியில் நீடிக்க முடியாது. தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் தான் மனநிறைவுடனும், ஓரளவு பொருள் நிறைவுடனும்  பணி செய்ய முடியும். அதை விடுத்து அவர்களை பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. தற்காலிகத்  தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக தமிழக அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்க முடியாதவை. முந்தைய அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், இப்போது மீதமுள்ள மண்டலங்களை நாங்கள் தனியாரிடம் ஒப்படைக்கிறோம் என்பது அபத்தமாகும். பணி நீக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள். கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்கள் 13 பேர் பணியில் இருக்கும் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் கூட மதிக்காமல் பணி நீக்குவது மனிதநேயமற்ற செயலாகும்.

2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் பல மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டதால் 700 பணியாளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பணி நீக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் பட்டியலினத்தவர் என்பதால் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். இன்று அவரே முதலமைச்சராகியுள்ள நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நீக்கப்படுகின்றனர். அதிகாரம் என்ற போதை கண்ணை மறைப்பதால், பணி நீக்கப்படுபவர்கள் பட்டியலினத்தவர்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் தூய்மைப் பணியாளர்கள் இப்போது பணி நீக்கப்பட மாட்டார்கள்; மாறாக வாழ்வாதார உத்தரவாதம் பெற்று வசதியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், திமுக சொன்னதை செய்யாமல், துரோகம் செய்ததன் விளைவு தான் தூய்மைப் பணியாளர்கள் வேலை இழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையாகவே பட்டியலினத்தவர் மீதும், தூய்மைப் பணியாளர் மீதும் அக்கறை இருந்தால்,  அவர்களை பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். மாறாக தற்காலிக தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->