வைரமுத்துவ உத்தமன்னு யாரும் சொல்ல மாட்டாங்க! ஒரு அரசியல் கட்சியோட பலம் அவருக்கு இருக்கு.. பாடகி சின்மயி குற்றச்சாட்டு பேட்டி!
No one will say that Vairamuthu is good He has the strength of a political party Singer Chinmayi allegation interview
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அளித்த பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2018 ஆம் ஆண்டு மீ டூ இயக்கத்தின் போது, வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சின்மயி பொதுவாக குற்றஞ்சாட்டினார். அந்த புகாருக்கு பிறகு, அவர் சினிமாவில் முன்னணி பாடகியாக இருந்த நிலையிலிருந்து, ஐந்து ஆண்டுகள் வேலை வாய்ப்பின்றி தவித்தார். மேலும், டப்பிங் யூனியனில் இருந்து அவருக்கு தமிழ் படங்களில் டப்பிங் பேச தடை விதிக்கப்பட்டது.
இத்தகைய தடைகளை மீறியும், லோகேஷ் கனகராஜ் போன்ற சில இயக்குநர்கள் சின்மயிக்கு வாய்ப்பு வழங்கினர். அண்மையில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டில் அவர் பாடிய முத்த மழை பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, சின்மயிக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அவர் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சின்மயி அளித்த பேட்டி ஒன்று தற்போது மீண்டும் வெளிச்சம் கண்டுள்ளது. அதில்,“திரையுலகில் யாரிடம் கேட்டாலும் இவர் (வைரமுத்து) உத்தமர் என யாரும் சொல்லமாட்டார்கள். ரகுமான் சார் ஸ்டுடியோவில் பாட வந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், இரண்டு மணி நேரம் இவருடன் தனியாக விட்டால், மகள் பாதுகாப்பாக திரும்புவாள் என அரசியல்வாதிகள் சொல்லச் சொன்னால் சொல்ல முடியாது”
என்று அவர் சவால் விடுத்துள்ளார். மேலும்,“பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் தைரியம் அவருக்கு உள்ளது. அரசியல் பலமும் உள்ளது. தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் அவரை ஆதரிக்கின்றன”என்றும் குற்றஞ்சாட்டினார்.
தனது அனுபவத்தையும் பகிர்ந்த சின்மயி,“ஒருமுறை அவர் என்னை கட்டி அணைக்கும் போது ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்தேன். உடல் நடுங்கி, அங்கிருந்து விரைந்து கீழே வந்தேன். என் அம்மா அங்கே இருந்தும் அவர் இப்படி நடந்துகொண்டார். காரில் ஏறியதும், அம்மாவிடம் எல்லாவற்றையும் சொன்னேன்”என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டி மீண்டும் வைரலாகியுள்ளதால், சமூக வலைதளங்களில் வைரமுத்து-சின்மயி விவகாரம் மீண்டும் தீவிரமாக பேசப்படுகிறது.
English Summary
No one will say that Vairamuthu is good He has the strength of a political party Singer Chinmayi allegation interview