ரூ.2.37 கோடி வருவாய் - சுற்றுலாக்கள் மூலம் கிடைத்ததாக அமைச்சர் பெருமிதம்!
Revenue of Rs 2.37 crore Minister proud that it was earned through tourism
பல்வேறு சுற்றுலாக்களால் ரூ.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக இயக்கப்படும் தொகுப்பு சுற்றுலாக்களான எட்டு நாட்கள் கோவா மந்திராலயம் சுற்றுலா, நான்கு நாட்கள் ஆறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா, மூன்று நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், மூனார் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலாக்களால் ரூ.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி, ஓட்டல் மற்றும் படகு குழாம்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பலதரப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றார்போல் உணவு வழங்கி விருந்தோம்பலில் சிறப்புடன் திகழவேண்டுமெனவும் அடிப்படை வசதிகளில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சுற்றுலா தொகுப்பு செயல்திறன்பற்றியும் தீவுத்திடல் வரவு செலவு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முந்தைய ஆய்வுகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மீதான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிலையான இயக்க நடைமுறை குறித்த கையேட்டினை வெளியிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Revenue of Rs 2.37 crore Minister proud that it was earned through tourism