மு.க.ஸ்டாலின் எதனால் சமூகநீதியின் எதிரி? கர்நாடக அரசிடம் பாடம் படித்து வாருங்கள் - அன்புமணி இராமதாஸ்!!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin caste survey
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை அதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் நாகமோகன் தாஸ் ஆணையம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் தாக்கல் செய்திருக்கிறது.
பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாள்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
பட்டியலின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அவர்களில் பல சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்காத நிலையில், அத்தகைய சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஆணையிட்டது.
அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என். நாகமோகன் தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் கர்நாடக அரசு அமைத்தது. அன்றிலிருந்து சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. நாகமோகன்தாஸ் ஆணையத்தின் அர்ப்பணிப்பு உணர்வையும், வேகத்தையும் பாராட்டியே தீர வேண்டும்.
ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே பணிகளைத் தொடங்கிய நீதியரசர் நாகமோகன்தாஸ், அடுத்த 35-ஆம் நாள், அதாவது மார்ச் 27-ஆம் நாள், பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்றும், பட்டியலினத்தில் உள்ள 101 சாதிகளின் மக்கள்தொகை விவரங்கள் துல்லியமாக திரட்டப்பட வேண்டும் என்பதால், அதற்கான பட்டியலின மக்களை சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என்று கோரி அரசிடம் இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்தார்.
அதை ஆய்வு செய்த கர்நாடக அரசு, நாகமோகன்தாஸ் ஆணையத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் அதே நாளில் ஏற்றதுடன், அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. அதன்பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்த ஆணையம், மே 5-ஆம் நாள் தொடங்கி, ஜூலை 6-ஆம் நாள் வரை 63 நாள்களில் கணக்கெடுப்பை நடத்தி முடித்து, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 101 பட்டியலின சாதிகளைச் சேர்ந்த 27 லட்சத்து 24,768 குடும்பங்களில் உள்ள ஒரு கோடியே 7 லட்சத்து 1982 பேரின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இது ஓர் இமாலயப் பணி என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
கர்நாடக அரசும் அறிக்கையை பெற்றுக் கொண்டு சும்மா இருக்கவில்லை. ஆகஸ்ட் 4-ஆம் தேதியான நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை மறுநாள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கவுள்ளது. கர்நாடகத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் அம்மாநில அரசும், ஆணையங்களும் காட்டும் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்க்கும் போது நமக்கும் தான் ஒன்றுக்கும் உதவாத ஓர் அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் வாய்த்திருக்கிறதே என்ற ஏக்கப் பெருமூச்சும், கோபமும்தான் எழுகிறது.
சமூகநீதியின் அடிப்படை அதை தாமதிக்காமல் வழங்குவதுதான் என்ற அடிப்படையை புரிந்து கொண்டு கர்நாடக அரசு செயல்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம், தமிழ்நாட்டு மக்கள்.
பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து சரியாக 369-ஆம் நாளில் அதற்கான பரிந்துரை அறிக்கையை கர்நாடக அரசு பெற்றிருக்கிறது. ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1224 நாள்கள் ஆகும் நிலையில் தமிழக அரசும், ஆணையமும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆணையம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அதைக் காட்டி வன்னியர்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, சரியாக 165-ஆம் நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முழுமையான பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 937 நாள்களாகின்றன. இதுவரை 6 முறை காலநீட்டிப்பு வாங்கியதைத் தவிர வேறு எதையும் ஆணையம் செய்யவில்லை.
பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்பதை 35 நாட்களில் கண்டறிந்த நாகமோகன் ஆணையம், அதை கர்நாடக அரசிடம் இடைக்கால அறிக்கை மூலம் தெரிவித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்றே அனுமதி பெறுகிறது. ஆனால், தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான தரவுகள் இல்லை என்பதை கண்டறியவே ஆணையத்திற்கு 30 மாதங்கள் ஆகியுள்ளது.
சமூகநீதி சார்ந்து அரசால் அமைக்கப்படும் அனைத்து ஆணையங்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை என்ற தனது அதிகாரத்தை கர்நாடக ஆணையம் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு கூறிவரும் பொய்யை மறுப்பதற்கு கூட திராணியில்லாமல் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தாலும், பட்டியலின மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்கிறது; இல்லாத வாய்ப்புகளைக் கூட உருவாக்கிக் கொள்கிறது. இந்த சமூகநீதி முயற்சிகளுக்கு அங்கு அமைக்கப்பட்ட ஆணையங்களும் துணை நிற்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைக் கூட பயன்படுத்த மறுக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சமூகநீதியின் எதிரி என குற்றஞ்சாட்டி வருகிறேன்.
உண்மையாகவே சமூகநீதி என்றால் என்ன? என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். சமூகநீதிக்கு மேலும், மேலும் துரோகம் செய்யாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin caste survey