திமுக அரசு மீண்டும் படுதோல்வி -  உயர்கல்வியை சிதைக்கும் உதவாத அரசு - அன்புமணி இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்காத உதவாத அரசு என்ற சிறுமையை திமுக அரசு பெற்றுள்ளது.

உழவர்கள் தொடங்கி உயர்கல்வி பணிக்காக காத்திருப்பவர்கள் வரை அனைவரையும் நம்பை வைத்து ஏமாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தமிழகத்திலுள்ள அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறி வந்தது. ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 2024&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியிடப் படும்; ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தோல்வியை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியதைத்  தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை  வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பம் செய்தவர்களுக்கு 04.08.2024&ஆம் நாள் போட்டித் தேர்வு நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூலை 22&ஆம் நாள் ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்பின் ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை.

2025&ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப் பட்ட போது, அதில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள்   ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதம் முடிவடைய இன்னும் 2 நாள்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் தேர்வுக்கான தேதி கூட அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பித்த பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள், எப்போது தேர்வு நடக்குமோ, எப்போது தான் தங்களின் வாழ்வில் நன்மை நடக்குமோ? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தாமல் தமிழக அரசு தாமதம் செய்வதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்திருந்தால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்க முடியும். ஆனால், என்ன காரணத்திற்காக அப்போது போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பது இன்று வரை தெரிவிக்கப்படவில்லை. நிர்வாகக் காரணம் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளை அடுத்த ஓரிரு மாதங்களில் நடத்தியிருக்க வேண்டும்; ஆனால், ஓராண்டாகியும் போட்டித் தேர்வுகளை நடத்தாதன் மூலம் தமிழக அரசு கலைக்கல்லூரிகளுக்கு பேராசிரியர்களை நியமிப்பதில் அக்கறை இல்லை என்பதை திமுக  நிரூபித்திருக்கிறது.

உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளை தமிழக அரசு நடத்தாததால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படும். முதலில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், அந்தப் பணிக்கான கல்வித் தகுதியையும், அனுபவத்தையும் பெற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். கடைசியாக கடந்த 2013&ஆம் ஆண்டு மே 28ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் வாயிலாகத் தான் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின் 12 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப் படவில்லை. அதனால், கடந்த 12 ஆண்டுகளுக்கும் முன் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இது அவர்களை மனதளவிலும், பொருளாதார அளவிலும் கடுமையாக பாதிக்கும், அவர்களின் குடும்பங்களும் கடும் வறுமையில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவதாக, தமிழக அரசின் கலைக் கல்லூரிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இளநிலைப் பட்டம் படித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு கல்லூரிகளில் அனைத்துத்  தகுதிகளையும் பெற்ற நிலையான உதவிப் பேராசிரியர்கள் இல்லை.  அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள 90% உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு காலியிடங்களை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

இந்திய விடுதலைக்கு பிந்தைய காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை மிக மோசமாக சீரழிக்கப்பட்ட  ஆட்சி என்றால், அது மு.க.ஸ்டாலின் தலைமையில் இப்போது நடைபெற்று வரும் சீரழிவு மாடல் அரசு தான். இதை உணர்ந்து கொண்டு கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்த தவறுகளுக்கு பரிகாரம் தேடும் வகையில்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->