போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!
Free training class for competitive exams District Collector Prathap inaugurated it
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், பயிற்சி பெற்ற மாணவ,மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 ல் 50 காலிப்பணியிடங்களும் குரூப் - 2ஏ-ல் 595 காலிப்பணியிடங்களும் அறிவிப்பு 15.07.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் குரூப் 2, 2ஏ ஆகிய போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி தொடங்கி வைத்து,வகுப்பு அறைகளை பார்வையிட்டார்.
முன்னதாக தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று தேர்ச்சி பெற்று சிறுபான்மையினர் நலத் துறையில் இளநிலை உதவியாளராக உள்ள தமிழ்ச்செல்வன், மற்றும் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வரும் தேவசேனாவை பாராட்டி புத்தகங்களை அவர் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் க.விஜயா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பாலகிருஷ்ணன், தன்னார்வ பயிலும் வட்டம் வழிகாட்டுனர் சீனிவாசன், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Free training class for competitive exams District Collector Prathap inaugurated it