தமிழகத்தில் "சாதிவாரி சர்வே" ஏன் எடுக்க வேண்டும்? அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
PMK Anbumani Ramadoss Caste census with Caste Survey
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்போம் என அறிவித்துள்ளதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. எங்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இதற்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான கடிதங்கள், சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி தொடங்கி வாஜ்பாய் மன்மோகன் சிங் பிரதமர் மோடி வரை பலமுறை பிரதமர்களை சந்தித்து சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு காங்கிரசும் திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமுக, காங்கிரஸ் இதனை செய்யவில்லை.
சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். caste census வேறு caste survey வேறு, தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க Caste Survey அவசியம். அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.
மொத்தம் 377 சமூகங்கள் இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். இதில் எந்தெந்த சமுதாயங்கள் அதிக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் எந்தந்த சமுதாயங்கள் இன்னும் இட ஒதுக்கீடு முழுமையாக அனுபவிக்காமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சர்வே அவசியமாகிறது.
உதாரணத்திற்கு மலை குறவர்களிடம் வீடு உள்ளதா? அவர்களில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? அவர்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது. மீனவர்களிடம் எத்தனை படகுகள் உள்ளது? அவர்களில் படித்தவர்கள் எத்தனை பேர்? அவர்களின் வாழ்வாதார நிலை எப்படி உள்ளது? இவற்றையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப தமிழக அரசு திட்டங்களை தீட்ட முடியும்.
மத்திய அரசு மேக்ரோ லெவலில் கணக்கெடுப்பு எடுக்கும், மாநில அரசு தான் மைக்ரோ லெவலில் எடுக்க வேண்டும். தலையை எண்ணும் வேலையை மட்டும் தான் மத்திய அரசு செய்யும். நாடார்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள்.. வன்னியர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத்தான் மத்திய அரசு சொல்லும். அதே நேரத்தில் அவர்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை, வாழ்வியல் நிலை எப்படி உள்ளது என்பதை அறிய தமிழக அரசு தான் சர்வே எடுக்க வேண்டும்.
பொதுவாக சாதி வாரி கணக்கெடுப்பின்போது 5 கேள்விகள் மட்டும் தான் கேட்பார்கள். ஆனால் தமிழக அரசு, தெலுங்கானாவை போல 75 வகையான கேள்விகளை கேட்டு மக்களின் வாழ்வியல், பொருளாதாரம் நிலைகளை 'கேஸ்ட் சர்வே' மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு மேலும் தமிழக முதலமைச்சர் எங்களுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்லக்கூடாது. 'இந்திய புள்ளியல் விவர சட்டம் 2008' மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதன் மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் ரத்து செய்ய முடியாது என அன்புமணி ஆவேசமாக பேசினார்.
தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிசி முஸ்லிம், அருந்ததியர், வன்னியர் உள்ளிட்ட எந்த ஒரு இட ஒதுக்கீட்டுக்கும் தரவுகள் கிடையாது. அதே நேரத்தில் ஜனார்த்தனன் கமிஷன் வன்னியர்களுக்கு 13 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொன்னால் அதை மட்டும் தமிழக அரசு ஏற்க மறுக்கிறது.
பட்டியலின மக்களும் வன்னியர்களும் அதிகம் வாழும் வட மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் இந்த மாவட்டங்கள் முதல் இடத்தில் உள்ளது.
இந்த வட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நிலை அறிந்து கொள்ளவும் சர்வே அவசியம். அதனை தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ப மக்கள் நலத் திட்டங்களை கொடுக்க முடியும்.
தமிழக அரசுக்கு உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருந்தால் பட்டியல் இன மக்கள் உட்பட அனைத்து மக்களும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கேஸ்ட் சர்வே எடுக்க வேண்டும்.
மாநில அரசுகளே எடுத்துக் கொண்டால் குளறுபடிகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, மத்திய அமைச்சர் அப்படி மட்டும் கூறவில்லை சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு சிறப்பாக எடுத்திருக்கிறார்கள், சில மாநிலங்கள் சரியாக எடுக்கவில்லை என்று சொல்லி உள்ளார்.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் SC, ST பிரிவில் 114 சமுதாயங்கள் உள்ளன. அவற்றில் 36 சமுதாயம் மலைவாழ் சமுதாய மக்கள் எஸ்டி பிரிவில் உள்ளனர். மீதமுள்ள 78 சமுதாயம் எஸ்சி பிரிவில் உள்ளனர்.
எஸ்.சி., எஸ்டி பிரிவினருக்கு 19 விழுக்காடு கொடுக்கிறோம். இந்த 19%-ல் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள்? எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை? என்பதை அறிந்து கொள்ள தரவு வேண்டும். அதற்கு கேஸ்ட் சர்வே வேண்டும்.
MBC-யில் 115 சமுதாயங்கள் உள்ளன. அவர்களில் எந்த சமுதாயம் அதிகமாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறது எந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மிகக் குறைவாக கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ள நமக்கு தரவுகள் வேண்டும். அதை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 377 சமுதாயங்கள் அனுபவிக்கிறார்கள். அவர்களில் எந்தெந்த சமுதாயம் அதிக அளவில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் இன்னும் எந்தெந்த சமுதாயம் இட ஒதுக்கீட்டை முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்ற விவரங்களை அறிந்து கொள்ள தமிழக அரசு சர்வே எடுக்க வேண்டும். எடுத்தால் தான் அந்த மக்களின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட நிலைகள் தெரியவரும் அதன் மூலமாக எஸ்சி, எஸ் டி மக்களுக்கும் இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்க முடியும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
PMK Anbumani Ramadoss Caste census with Caste Survey