வேட்பாளர் படிவத்தில்..."எடப்பாடி கையொப்பம் போடக்கூடாது".. தடை கோரி புதிய மனு.!!
Petitioned to ECI for stay to EPS signing in AIADMK nomination form
மக்களவைத் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல்.!!
அதிமுக சட்டவிதிகளை மீறி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் "அதிமுக கட்சி விதிகள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு ஆகியவற்றில் உண்மையை மறைத்து எடப்பாடி பழனிச்சாமி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சூட் மனு விசாரணையில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டுதான் ஈரோடு இடைத்தேர்தலில் போது எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் படிவத்தில் கையொப்பம் போடக்கூடாது என தெரிவித்து அக்கட்சியின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் கையொப்பமிட அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வேட்பாளர் படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். பொதுச் செயலாளர் வழக்கில் விசாரணை முடிந்து இறுதியாக பிறப்பிக்கப்படும் உத்தரவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றி வேட்பாளரின் பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.
பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது செல்லாது என்றோ, பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றோ, எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவரால் கையொப்பமிட்ட தேர்தல் படிவங்களும் செல்லாத ஒன்றாக மாறிவிடும்" என தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பரிசீலனை எடுத்துக் கொண்டால் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் படிவத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Petitioned to ECI for stay to EPS signing in AIADMK nomination form