பஞ்சமி நில விவகாரம் : முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்! - Seithipunal
Seithipunal


மதுரை, கருமாத்தூர் பகுதியில் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியலின மக்களுக்கு பிரித்து வழங்கிட வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின  மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அக்கடிதத்தில், "மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் கருமாத்தூர் பகுதியில் உள்ள சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவிலான பஞ்சமி நிலத்தை, நிலமற்ற பட்டியலின மக்களுக்கு பிரித்து வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 1936 ம் ஆண்டில் கருமாத்தூர் பகுதியில் பட்டியலின பிரிவை சார்ந்த எழுவன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோருக்கு சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவிலான பஞ்சமி நிலங்கள் அரசால் அளிக்கப்பட்டது. ஆனால் விவசாயம் மேற்கொள்ள இயலாத நிலையில் 1969ம் ஆண்டில் மேற்படி நிலங்கள் திரு.வெள்ளைச்சாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு விற்கப்பட்டுள்ளது. அப்போது அந்த நிலத்தை வாங்கியவர்கள் மீண்டும் 1977ம் ஆண்டில் மீண்டும் ஒரு தனியாருக்கு அதே நிலத்தை விற்பனை செய்துள்ளனர். பஞ்சமி நிலங்களை இத்தகைய தன்மையில் சட்டத்திற்கு விரோதமான முறையில் தனியாருக்கு விற்பனை செய்வது செல்லாததாகும்.

எனவே, இத்தகைய மோசடியான நிலவிற்பனையை அரசு முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும், மேற்படி பஞ்சமி நிலங்களை நிலமற்ற பட்டியலின் மக்களுக்கு விநியோகம் செய்ய முன்வர வேண்டுமெனவும் கோரிக்கையினை முன்வைத்து அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், அவர்களுக்கு நிலம் வழங்குவதற்கு பதிலாக கடந்த 2005 ஆம் ஆண்டில் நிலத்தை ஆய்வு செய்த உசிலம்பட்டி கோட்டாட்சியர் அவர்கள், நிலங்களை அளவீடு செய்து “தீர்வு செய்யப்படாத தரிசு நிலம்” என வகைப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். இது சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையாகும்.

இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் உள்ள மக்கள் நிலத்திற்கான கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். எனவே அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள மூன்று ஏக்கர் பஞ்சமி நிலங்களை வகை மாற்றம் செய்து, அப்பகுதியில் உள்ள நிலமற்ற ஏழை பட்டியலின மக்களுக்கு வழங்கிட தமிழக அரசு  உரிய ஆவன செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிறராலும், தனியார் நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென ஏற்கனவே பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும், அரசாங்க வழிகாட்டுதல்களும் இருந்த போதிலும் அந்நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலே உள்ளது. எனவே, இவ்விசயத்தில் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு தமிழகம் முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து நிலமற்ற ஏழை, எளிய பட்டியலின மக்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panjami land issue CPIM letter to MK Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->