எல்லாரும் மோசமான வார்த்தையால் திட்டினாங்க..8 ஆண்டுகளுக்கு பிறகு விருது- நடிகை மனிஷா யாதவ் வேதனை!
Everyone scolded her with bad words Award after 8 years Actress Manisha Yadav is in pain
‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மனிஷா யாதவ், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதன்பின்னர் ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘சண்டி முனி’, ‘ஒரு குப்பை கதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக ‘ஒரு குப்பை கதை’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசு அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது. படம் வெளியான 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனிஷா யாதவ் கூறியதாவது:“‘ஒரு குப்பை கதை’ படம் வெளியானபோதே எனக்கு விருது கிடைக்கும் என நினைத்தேன். தாமதமாக கிடைத்தாலும் மகிழ்ச்சி தான். இயக்குநர் கதை சொன்னவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். ஒரு பெண் கணவருக்கு தெரியாமல் தவறு செய்து, பின்னர் அதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை மாற்றிக் கொள்வது போன்ற கருத்துள்ள கதை இது. சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் என்று நினைத்தேன்,” என்றார்.
மேலும், இந்த கதையை பல நடிகைகள் நிராகரித்ததாகவும் அவர் கூறினார். “கணவருக்கு துரோகம் செய்கிற கதாபாத்திரம் என்பதால் பலர் நடிக்க மறுத்தார்கள். ஆனால் நான் அதை ஒரு கருத்துள்ள கதையாக பார்த்தேன்,” என்றார்.
படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்த அவர், “கிட்டத்தட்ட 35 நாட்கள் கூவம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்பாவியான மனைவி, குழந்தையின் தாய் என ‘பூங்கொடி’ கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. தினேஷ் மாஸ்டர் மற்றும் இயக்குநர் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார்கள்,” என்று தெரிவித்தார்.
படம் வெளியான பிறகு கிடைத்த எதிர்வினைகள் குறித்து அவர் கூறுகையில், “பலர் என்னை பாராட்டினார்கள். ஆனால் சிலர் கதாபாத்திரத்துடன் என்னை இணைத்து மோசமாக விமர்சித்தார்கள். அதெல்லாம் மனதை பாதித்தது. இருந்தாலும் அந்த படம் தான் இன்று எனக்கு விருதை பெற்று கொடுத்துள்ளது,” என்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த விருது, மனிஷா யாதவின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Everyone scolded her with bad words Award after 8 years Actress Manisha Yadav is in pain