பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம் - சீமான் கொந்தளிப்பு! 
                                    
                                    
                                   NTK Seeman Condemn to PM Modi BJp 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும்.
அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று பெரும்பழியைச் சுமத்தியுள்ளது இனவெறி பாகுபாட்டின் உச்சமாகும். பிரதமர் மோடி தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின்போது தமிழர்களைத் திருடர்கள் என்றும், ஓடிசாவை தமிழன் ஆளலாமா? என்றும் இன வெறுப்பை விதைத்த  பிரதமர் மோடி, அதன் நீட்சியாக தற்போது தமிழர்களை வன்முறையாளர்களாக, கட்டமைப்பது, தமிழினத்தை இழிவுப்படுத்தும் கொடுஞ்செயலாகும். வந்தாரை வாழ வைத்ததோடு, ஆளவும் வைத்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகந்தழுவி நேசித்து நின்ற ஓர் இனத்தை  திருடர்கள், வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்துவது தமிழ் இனத்திற்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். 
தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக வெளியான காணொளிகள் அனைத்தும் பொய்யானது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது பிரதமர் மோடிக்கு தெரியாதா? உங்கள் கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அனுப்பிய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் அப்படி எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது  தெரியாதா? அப்போலி காணொளிகளைப் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியாதா?  பீகார் சட்டமன்றத்திலேயே அவை போலிக் காணொளிகள் என்று ஒப்புக்கொண்டதுதான் பிரதமருக்கு தெரியாதா? அவையெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு அவதூறை பிரதமர் மோடி பரப்புவது தமிழர் விரோதப்போக்கன்றி வேறென்ன?
உண்மையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதில்லை. பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியுமா? தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா? கலவரம் செய்தவர்களைக் கட்டுப்படுத்தச் சென்ற தமிழ்நாடு காவல்துறையினரையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கினர் என்பதாவது பிரதமருக்கு தெரியுமா? அப்போதெல்லாம் பிகாரிகள் தமிழர்களைத் தாக்குகின்றனர் என்று பேசாத பிரதமர் மோடி, வடவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் வன்முறைகள் தவறு என்று பேசாத பிரதமர் மோடி, தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற ஒரு பச்சை பொய்யைக் கூறுவது எதனால்? அற்ப தேர்தல் வெற்றிக்குத்தானே?
இராமநாதபுரத்தில் மீனவப்பெண் வடவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது வாய் திறவாத மோடி, அம்பத்தூரிலும், ஈரோட்டிலும் தமிழகக் காவலர்களை வடவர்கள் தாக்கியபோது பேசாத பிரதமர் மோடி, வட மாநிலங்களில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்ப்பிள்ளைகள் வடவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, வடமாநிலங்களில் விளையாடச் சென்ற தமிழக கபடி வீரர்கள், வடவர்களால் தாக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத மோடி, முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொடர்வண்டி இருக்கைகளை ஆக்கிரமித்து வடவர்கள் அட்டூழியம் செய்தபோது அமைதி காத்த மோடி, ஆந்திராவில் 20 தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், கேரளாவிலும் கர்நாடகாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டு அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டபோதும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும் தொடர்வது குறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத பிரதமர் மோடி, எந்தவொரு குற்றமும் செய்யாத தமிழர்களை மட்டும் வன்முறையாளர்களாக, திருடர்களாகக் கட்டமைப்பது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு அன்றி வேறென்ன? இத்தனை காலமும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து பிளந்த பாஜகவும், பிரதமர் மோடியும், இனி அது எடுபடாது என்று தெரிந்தவுடன் வடவர்களின் வாக்குகளைப் பெற இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகின்றனர்.
இந்தியப் பிரதமரின் பொய்ப்பேச்சு, தமிழர்களைத் திருடர்கள், வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் எண்ண வழிவகுக்காதா? இந்திய அரசமைப்பின் மீது உறுதியேற்று, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களுக்குமான பிரதமர் ஓர்  இனத்தை மட்டும் குறி வைத்து பொய்யைப் பரப்புவது உலக அரங்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே இத்தகைய அவதூற்றைப் பரப்பி வருகிறாரா? 
இதுதான் பிரதமர் மோடி தமிழர்களுக்குத் தரும் மதிப்பா? இதுதான் இந்திய நாடு பேணும் ஒற்றுமையா? கட்டிக்காக்கும் ஒருமைப்பாடா? வெட்கக்கேடு! தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பிரதமர் பெருமையாகப் பேசுவது அனைத்தும், தமிழர்களை ஏய்த்து அவர்களின் வாக்குகளைப் பறிக்கும் மலிவான தந்திரம் என்பது மீண்டும் தெளிவாகிறது. இதிலிருந்து இந்திய நாடும், பிரதமரும், அரசும், ஆட்சியாளர்களும் இந்தி பேசும் மக்களுக்கானது மட்டுமே என்பதும், தமிழர்கள் இந்நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது. இதையெல்லாம் காணும் தமிழ் இளையோருக்கு இந்த நாட்டின் மீதும், அதன் ஆட்சி முறையின் மீதும் வெறுப்புதான் வருமே அன்றி எப்படி பற்று வரும்? 
இனியும் பிரதமர் மோடியின் தமிழர்கள் மீதான வெறுப்புப்  பேச்சு தொடருமாயின், அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, நாட்டினைப் பெரும் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறேன்.
ஆகவே, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறுப்பு பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் ஒடிசா தேர்தலுக்காக தமிழர்களைத் திருடர்களாகவும், பீகார் தேர்தலுக்காக தமிழர்களை வன்முறையாளர்களாகவும் கட்டமைக்கும் பாஜகவுக்கு வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       NTK Seeman Condemn to PM Modi BJp