தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தேமுதிக-க்கு ஸ்டாலின், எடப்பாடி கொடுத்த ஆஃபர்.. திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக? பிரேமலதா எடுத்த முடிவு!
New twist in Tamil Nadu politics Stalin Edappadi offer to DMDK Is DMDK leaning towards DMK Premalatha decision
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும் தேமுதிகவிலிருந்து ஒரு எம்எல்ஏ கூட வெற்றி பெறாத நிலையில், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை பிரேமலதா விஜயகாந்த் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகவுள்ள சூழலில், திமுக மற்றும் அதிமுக இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டது கவனம் பெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறியிருந்த பிரேமலதா விஜயகாந்த், “மற்ற கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்காத போது, நாம் மட்டும் அவசரப்பட வேண்டுமா?” எனக் கூறி முடிவை ஒத்திவைத்தார்.
அதே மாநாட்டில் விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சித்தார்; திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிக்காதது, தேமுதிக எந்த அணியில் இணையப்போகிறது என்ற விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்கிடையே, தேமுதிக இரு பெரிய திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
திமுக மற்றும் அதிமுக இரு தரப்பிலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பில் சட்டமன்றத் தொகுதிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஒதுக்கப்படும் என கட்சித் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம், அதிமுக தரப்பில் இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜயபிரபாகரன் அதிமுக கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சூழலில், கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும் தேமுதிக எம்எல்ஏ இல்லாமல் போனதை கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியில் சேர்ந்தால் குறைந்தபட்சம் சில எம்எல்ஏக்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்ற கணக்கில் பிரேமலதா விஜயகாந்த் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேமுதிக–திமுக கூட்டணி உருவாகும் வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
English Summary
New twist in Tamil Nadu politics Stalin Edappadi offer to DMDK Is DMDK leaning towards DMK Premalatha decision