திமுக தலைவராக 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க ஸ்டாலின்.!!
MkStalin elected as DMK chief begins at 6th year
திராவிட கழகத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அண்ணாதுரை கடந்த 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார். திமுகவின் தலைவராக இருந்த அண்ணாதுரையின் மறைவுக்கு பிறகு மு.கருணாநிதி 1969 முதல் திமுகவின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கருணாநிதியின் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவருடைய மகன் மு.க ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மேலும் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்குப் பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுகவின் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 6வது ஆண்டில் தமிழக முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் அடி எடுத்து வைக்கிறார்.
திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொது தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கட்சியின் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
MkStalin elected as DMK chief begins at 6th year