பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் மாதம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் உயர்வு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
mk stalin cm press people pension
பத்திரிகையாளர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையினை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் மாதம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 6,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.
அதேபோல, அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க வீடு அல்லது வீடுகட்ட நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டுமனைகள் வழங்க ஏற்பாடு செய்யவும், இதற்கு பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் துவக்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் ஏனைய கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
mk stalin cm press people pension