'தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் கூட திமுகவினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை'; அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை..!
Minister Rajeshkumar warned that DMK members have not learned their lesson even after their crushing electoral defeat
தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் கூட திமுகவினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து வரம்பு மீறி இழிவாக விமர்சிப்பதை திமுக தொடர்ந்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவரும், அமைச்சருமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''சென்னையில் இன்று (மே 23) நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இதில், காங்கிரஸ் கட்சி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்து விட்டதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். திமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும், காங்கிரஸ் போட்டியிட்ட 28 இடங்களில் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

‘இந்தக் கூட்டணி அமைப்பில் திமுகவின் வாக்குகளால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றார்கள்’ என்று தேர்தல் தீர்ப்பு வெளிவந்த பிறகு பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது திமுகவின் மேலாதிக்க மனோபாவத்தைதான் வெளிப்படுத்துகிறது.
தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் கூட திமுகவினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத்தான் மக்கள் விரும்பி ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு.
மேலும், திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக, விசிக ஒழிக என்று முழக்கங்களை எழுப்பியதோடு, தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சனம் செய்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் நாகரிகமற்ற கோஷங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் எழுப்பப்பட்டு இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
திமுகவின் படுதோல்விக்கு என்ன காரணம்?
தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது, வெற்றி பெற்ற பிறகு தனித்து ஆட்சியை அமைப்பது, தேர்தல் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதர மறுப்பது. இவ்விதம் 60 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியாயமற்ற அணுகுமுறையைத்தான் தவெக நிகழ்த்திய விசில் புரட்சி மூலம் முறியடித்துக் காட்டியிருக்கிறது.
தவெகவின் விக்கிரவாண்டி முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அதன் தலைவர் விஜய் அவர்கள் பிரகடனம் செய்தார். அதை ஏற்ற தமிழக மக்கள், அமோக ஆதரவோடு தவெகவை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு வழங்குகிற தவெக தலைவர் விஜய்யின் விரிந்த ஜனநாயக உணர்வை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான், திமுக கூட்டணியில் நீண்டகாலமாக புழுக்கதோடு இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெக வழங்கிய ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். இது கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசியலில் நிகழாத அற்புதமாகும்.

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துகொண்ட முயற்சியை யாரும் மறக்க முடியாது.
1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதும் கிடையாது, வெற்றி பெற்றதும் கிடையாது. எனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைப் பெயரளவில் ஏற்றுக்கொள்ளாமல், மனப்பூர்வமாகத் மதிப்பதோடு, நேற்று வரை கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்பு மீறி இழிவாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை திமுக மேற்கொள்ளுமேயானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேருமென்று எச்சரிக்க விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Rajeshkumar warned that DMK members have not learned their lesson even after their crushing electoral defeat