எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை.. போட்டுத் தாக்கிய பொன்முடி..!!
Minister Ponmudi criticized EPS
கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். பிறகு மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி "விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் விவகாரத்தினை அரசியலாக்க வேண்டிய நிகழ்வு அல்ல.
முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என சிலர் உளறிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அம்பத்தூரில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டதை மறந்து விட்டாரா?

திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசியல் பேச வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார். அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈடுபட்டதில் 55 ஆயிரத்து 474 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 69 நான்கு சக்கர வாகனங்களும், 1077 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே முதலமைச்சர் மு க ஸ்டாலினை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறும் அருகதை எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது. காவல்துறை மிகவும் திறமையாக முதலமைச்சர் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்" என செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ளார். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பேட்டில் கடந்த 13 வருடங்களாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக மரணங்கள் நிகழவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Ponmudi criticized EPS