''கோட் அணிந்து வீடியோ வெளியிட்டதால் உருவ கேலி செய்தார்கள்; என்ன அவதூறு பரப்பினாலும், அமைதியாக இருந்து மக்களுக்கான சேவை செய்வேன்''; அமைச்சர் கீர்த்தனா..!
Minister Keerthana says she was mocked for posting a video wearing a coat
தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே ஆமத்தூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ''தான் கோட் அணிந்து வீடியோ வெளியிட்டதால் உருவகேலி செய்தார்கள்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, கடந்த 08 ஆண்டுகளாக அரசியல் வியூக வகுப்பாளராக பணியாற்றி யார் யாரையோ வெற்றி பெற வைக்கும் நாம், ஏன் வெற்றி பெற்று, மக்கள் சேவையாற்ற கூடாது என நினைத்து துவக்கிய பயணமே "விருதை மகள் கீர்த்தனா" என்ற அரசியல் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொழில்துறை அமைச்சகத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே அமைச்சராக இருந்த நிலையில், ஒரு பெண்ணை நம்பி சிங்கப் பெண்ணாக தலை நிமிர்ந்து நடக்க வைத்த முதல்வருக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் தொழில்துறையை கொண்டு வருவோம் என்றும், ''எத்தனையோ பேர் என்னை ஏளனமாக பார்த்து சிரித்தார்கள். கோட் அணிந்து வீடியோ வெளியிட்ட என்னை உருவகேலி செய்தார்கள்.'' என்று பேசியுள்ளார்.
அதையும் தாண்டி மூன்றே மாதத்தில் வெற்றி தமிழ்நாடு என்ற ஒரு லட்சம் கோடிக்கு மிகப்பெரிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்று சுட்டிக்காட்டியதோடு, 01 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்றும், விருதுநகர் மாவட்டத்தில் 1600 கோடியில் இரண்டு பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், இதுதான் இங்குள்ள இளைஞர்களுக்கு முதல்வர் கொடுக்கும் நம்பிக்கையாக உள்ளதாகவும், இது போன்ற நம்பிக்கை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஊதியம் பெறக்கூடிய வேலைவாய்ப்புகளே அதிகமாக உள்ளது. உயர்ந்த ஊதியம் பெறும் வகையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வந்து உயர் ஊதியம் கிடைக்க 20 நிறுவனங்களை வெற்றி தமிழகம் முதலீட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உயர்ந்த ஊதிய தொகை பெறும் வகையிலான நிறுவனங்களை கொண்டு வருவது முதல்வரின் கனவாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, ஏராளமான பொய்யான தகவல்கள் வரலாம். ஆனால், 'நாம் சொல் அல்ல செயல்' என்ற நோக்கத்துடன் செயலாற்றி வருகிறோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னால் யார் யாரெல்லாமோ ஆட்சிக்கு வந்தார்கள், இதற்கு முன் ஆட்சி நடத்தியவர்கள் யாருமே இதுவரை ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கவில்லை என்று குறிப்பிட்டதோடு, இன்றைக்கு தவெக ஆட்சியில் மூன்றே மாதங்களில் இலக்கை அடைந்துள்ளோம். என்னைப்பற்றி என்ன அவதூறு பரப்பினாலும், பரவாயில்லை அமைதியாக இருந்து மக்களுக்கான சேவை செய்வேன் என்று அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
English Summary
Minister Keerthana says she was mocked for posting a video wearing a coat