முன்பே தெரிந்திருந்தால்.. முதலீடுகளை ஈர்க்க முதல்வருடன் லண்டன் செல்லாது ஏன் ..? அமைச்சர் கீர்த்தனா விளக்கம்..!
Minister Keerthana explains why she did not accompany the Chief Minister to London to attract investments
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் கடந்த 10-ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்காதது எதிர்கட்சிகள் தரப்பில் பெரும் கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பியது.
இந்நிலையில் இதுகுறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ''அவருக்கு வெளியே சொல்ல முடியாதபடியான அந்த நான்கு நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய உடல்நிலை பாதிப்பு. அதனால் அவர் பங்கேற்கவில்லை. இதனை அவர் எனக்கும், முதலமைச்சருக்கும் தெரிவித்தார்.'' எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த விளக்கத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தன. இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்து காட்டமாக பதிலடி கொடுத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே அறுவை சிகிச்சை செய்ததாகவும், 12-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் ஒரு அறிக்கை அமைச்சர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.
ஆனால், அதே நாள் (10-ஆம் தேதி) அமைச்சர் கீர்த்தனா, நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை வைத்து, இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனாவே, ஏன் முதலமைச்சர் விஜய்யுடன் லண்டன் செல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

''நான் லண்டன் செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன். ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் லண்டன் செல்லவில்லை. அதேசமயம் உடல்நிலை சரியில்லை என்றாலும், முதல்வரின் லண்டன் பயண ஏற்பாடுகளையும், லண்டன் முதலீட்டாளர்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட தனது துறை ரீதியான பணிகளை மேற்கொண்டேன்.
முதலமைச்சர் லண்டன் பயணித்த அன்றைய தினத்தில் தான் ஏற்கனவே ஏற்பட்ட காயத்துக்காக பொருத்தியிருந்த இம்ப்ளாண்ட்டால் வலி காரணமாக அசௌகரியம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் வந்தது. அதன் காரணமாகவே முதலமைச்சருடன் லண்டன் பயணத்தில் என்னால் செல்ல முடியவில்லை. சிகிச்சை காரணமாகத்தான் முதல்வர் விஜயுடன் நான் லண்டன் செல்லவில்லை. அதுதவிர்த்து வேறு எந்தக் காரணமும் இல்லை.
நான் லண்டன் பயணத்தில் இடம்பெறாதது குறித்து இவ்வளவு பெரிய விவாதம் ஏற்படும் என எனக்குத் தெரியாது. முன்பே தெரிந்திருந்தால், இதற்கான விளக்கத்தை அன்றையதினமே தெரிவித்திருப்பேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Keerthana explains why she did not accompany the Chief Minister to London to attract investments