வைகோ தோல்வியடைந்துவிட்டார்... ஜனநாயக படுகொலை... கொந்தளிக்கும் மல்லை சத்யா! 
                                    
                                    
                                   MDMK Vaiko Durai vaiko Mallai Sathya 
 
                                 
                               
                                
                                      
                                            ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ இன்று அறிவித்துள்ளார்.
அதில், "சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என கடந்த 17-ந்தேதி அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன்.
அந்த அறிவிப்பை, கடந்த 19-ந்தேதி பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, கடந்த 24-ந்தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், கடந்த 27-ந்தேதி பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப்பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 6-ந்தேதி அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் படி துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்" என்று வைகோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தன் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும் வைகோ தன்னுடைய மகன் குறித்தே சிந்திக்கிறார். கட்சியின் தலைவராக, பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் எனவும் மல்லை சத்யா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       MDMK Vaiko Durai vaiko Mallai Sathya