தமிழீழ பாடகர் தேனிசை செல்லப்பா மறைவு - வைகோ இரங்கல்!  - Seithipunal
Seithipunal



மதிமுக தலைவர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழீழ விடுதலைக்காகவும், தமிழின மறுமலர்ச்சிக்காவும் வாழ்நாள் முழுவதும் இசைக் குயிலாய் இன்னிசை பாடல்களை இசைத்து வந்த தேனிசை செல்லப்பா இன்று இயற்கையில் இணைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.

தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பாவின் குரல் உலகம் முழுவதும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. இளம் வயதில் தூத்துக்குடியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களைச் சந்தித்து, அவரது நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு நாடகங்களில் நடித்தும், பாடல்களைப் பாடியும் வந்தார்.

தந்தை பெரியார் மன்னார்குடியில் நடத்திய தேசப் பட எரிப்பு போராட்ட விளக்க மாநாட்டில் தேனிசை செல்லப்பா பாடிய பாடல், அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவரான சி.பா.ஆதித்தனாரை பெரிதும் கவர்ந்தது. அவரின் விருப்பப்படி நாம் தமிழர் இயக்க மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் தன்மானப் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி வந்தார்.

தமிழீழ விடுதலைக்காக களமாடிய பேபி சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் பிரபாகரனோடு தேனிசை செல்லப்பா அறிமுகமானார்.

அது முதல் தமிழீழ விடுதலைக்காக தன் எழுச்சிக் குரலால் பாடல் இசைத்து, தமிழ் உணர்வை விதைத்து வந்தார். 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சம் தமிழர்கள் திரண்ட கூட்டத்தில் தேனிசை செல்லப்பாவின் ஈழ விடுதலைப் பாடல்கள் புத்தெழுச்சியை ஊட்டியது.

லண்டன் மாநகரில் அவருக்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டு, அங்கிருந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தேனிசை செல்லப்பா அவர்கள் ஊண் உருகப் பாடியபோது, கூடியிருந்த மக்களும் கண்ணீர் சிந்தி தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய காட்சி காணொலியாய் உலகம் முழுவதும் வலம் வந்தது.

வீரத்தின் வேர்கள், தாய் நிலத்து வேலி முதலான பல்வேறு தலைப்புக்களில் ஈழ விடுதலைக்காக பாடிய இவரை, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பாசறை பாணர் என்று பாராட்டினார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் இலக்கிய அணி நடத்திய பாவேந்தர் விழாக்களிலும், கழகத்தின் கூட்டங்களிலும் தேனிசை செல்லப்பா பலமுறை பாடி மகிழ்வித்திருக்கிறார்.

வெளி ஊர்களுக்கு காரில் பயணம் செய்கிறபோது, இரவு, பகல் என எந்த வேளையிலும் அவரது உயித் துடிப்பான பாடல்களைக் கேட்டு மகிழ்வது என் வழக்கம். என் மீதும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், மதிப்பும் கொண்டிருந்த தேனிசை செல்லப்பாவின் மறைவு தமிழின உணர்வுள்ள அனைவருக்கும் பேரிழப்பாகும்.

தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவால் துயரத்தில் உள்ள அவரது மனைவி விஜயா, அன்பு மகன் இளங்கோவன், ஆருயிர் புதல்விகள் தமிழ்க்கொடி, ராஜேஸ்வரி ஆகியோருக்கும், தமிழ் மக்களுக்கும், ஈழத்தமிழ் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேனிசை செல்லப்பா அவர்கள் தனது உணர்ச்சிமிகு பாடல்களால் எந்நாளும் நம்மோடு வாழ்வார்!” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mdmk vaiko condolence to singer sellappa


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->