முதல்வர் விஜயை இன்னும் சந்திக்காத மேயர் பிரியா! ஜார்ஜ் கோட்டை – ரிப்பன் மாளிகை இடையே மோதலா?காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் இதுவரை அவரை நேரில் சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஜார்ஜ் கோட்டைக்கும் ரிப்பன் மாளிகைக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2026 சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்ததுடன், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்புற ஆதரவு அளித்தன. மேலும் அதிமுகவிலிருந்தும் 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.இதன் மூலம் தமிழக அரசியலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் அமைப்பு ஆட்சியை பிடித்தது.

முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அதேபோல் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வருகின்றனர்.

ஆனால் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் இதுவரை விஜயை நேரில் சந்திக்காதது கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாக ஆலோசனை கூட்டத்திலும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா முக்கிய இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போதைய சூழலில் அவர் முழுமையாக அமைதியாக இருப்பது அரசியல் ரீதியாக பேசப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மேயர் பிரியா, தேர்தலுக்கு முன்பே ஏற்பட்ட கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய விடுப்பு குறித்து மாநகராட்சி ஆணையரிடம் முறையாக தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.துணை மேயர் மகேஷ் குமார் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுகவை சேர்ந்த 153 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால் தவெக ஆட்சி அமைந்த பிறகு, திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலும் அமைதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மாநகராட்சி தொடர்பான சில ஆலோசனை கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழல் காரணமாக, மாநில அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையே ஒருவித நிர்வாக இடைவெளி உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், சென்னை போன்ற பெருநகரத்தில் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மாநில அரசு மற்றும் மாநகராட்சி இணைந்து செயல்படுவது மிகவும் அவசியமானது என்பதால், இரு தரப்பும் விரைவில் ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayor Priya has not yet met Chief Minister Vijay Is there a clash between George Fort and Ripon Mansion What is the reason


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->