47-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி...! அடுத்த ஆட்டத்துக்கு நாங்க ரெடி...! - மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்...!
DMK youth team steps 47th year We ready next game Udhayanidhi Stalin shows mass
தமிழக அரசியல் வரலாற்றில் இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்திய அமைப்பாகக் கருதப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி, பல்வேறு அரசியல் போராட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் அமைப்பு வளர்ச்சியின் அடையாளமாக 46 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து, இன்று தனது 47-வது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உற்சாகமும், அரசியல் உணர்வும் நிறைந்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"கழகம் கடுமையான அரசியல் நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட காலகட்டத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மிசா தலைமுறையின் உறுதி, தியாகம் மற்றும் போராட்ட உணர்வை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நமது தி.மு.க. இளைஞர் அணி.
கொள்கைச் சிந்தனைகளை இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பதிலும், மக்கள் நலப் பணிகளை காலத்தின் தேவைக்கேற்ப புதுப்புது அணுகுமுறைகளுடன் முன்னெடுப்பதிலும் இளைஞர் அணி தொடர்ந்து முன்னணி பங்காற்றி வருகிறது.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் திராவிட சிந்தனையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை இந்த அமைப்பு தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.46 ஆண்டுகால சாதனைப் பயணத்திற்குப் பிறகு, புதிய இலக்குகள், புதிய சவால்கள் மற்றும் புதிய பொறுப்புகளுடன் 47-வது ஆண்டை வரவேற்கும் இந்த தருணத்தில், களப்பணியிலும், மக்கள் பணியிலும் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கொள்கைப் பணிகளையும், மக்கள் சேவையையும் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இன்னும் வலிமையாக முன்னெடுத்து, கழக இளைஞர் அணியின் அடுத்த வெற்றிப் பயணத்தை தொடங்க அனைவரும் தயாரா? அடுத்த இன்னிங்ஸை உற்சாகத்துடன் ஆரம்பிக்கலாமா?" என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
DMK youth team steps 47th year We ready next game Udhayanidhi Stalin shows mass