மதுரை மேயர் இந்திராணி ராஜினாமாவும், அதிரவைக்கும் பின்னணியும்!
madurai mayor resign
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரம் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, மேயர் இந்திராணி இன்று திமுக தலைமை அறிவுறுத்தலின்படி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்ற அவசரக் கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.
ராஜினாமா பின்னணி:
2022 மார்ச் 4 அன்று மதுரை மாநகராட்சியின் 8-வது மேயராக பொறுப்பேற்றிருந்த இந்திராணி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருங்கிய ஆதரவாளர் பொன் வசந்தின் மனைவி ஆவார். ஆரம்பத்தில் அமைச்சர் வழிகாட்டுதலின்படி நிர்வாகம் நடந்தாலும், பின்னர் பொன் வசந்த் தனிப்பட்ட முறையில் நகராட்சி நடவடிக்கைகளில் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதிகாரிகளிடையே விரிசல்கள் ஏற்பட்டன.
சொத்து வரி முறைகேடு விசாரணையில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தும் உடந்தையாக இருப்பது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்திராணி பதவியில் தொடர்ந்தது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தலைமை அவரை மாற்ற தீர்மானித்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் இணைந்து இன்று காலை இந்திராணியிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றனர். இதன் மூலம் மதுரை மேயர் பதவி காலியாகியுள்ளது.
புதிய மேயர் தேர்வு 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான சுற்றறிக்கை 100 கவுன்சிலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர்கள் ஆலோசித்து புதிய நபரை பரிந்துரிக்க உள்ளனர்.