நாளை சென்னைக்கு Red Alert : தொடங்கும் வடகிழக்குப் பருவமழை: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
Heavy rains to begin in Chennai tomorrow
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வரும் 19-ஆம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை விலகி, வடகிழக்குப் பருவமழை தொடங்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாளையத்தினம் (16-10-2025) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையத்தினம் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 05 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Heavy rains to begin in Chennai tomorrow