1962 தேர்தல்: ராஜாஜி நடத்திய ‘தர்ம யுத்தம்'..!ராஜாஜி–திமுக சவால்களை மீறி காமராஜ் மீண்டும் முதல்வர்!1962இல் காங். வென்றது எப்படி?
1962 Election Rajaji Dharma Yuddha Kamaraj becomes Chief Minister again despite Rajaji DMK challenges How did the Congress win in 1962
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படும் 1962 சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் காமராஜ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
1962 பிப்ரவரி 17 முதல் 25 வரை நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கு முன்பாக, அப்போது ‘மெட்ராஸ்’ மாநிலம் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியிலேயே இருந்தது. 1947க்கு பிறகு தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்த நிலையில், அந்த ஆட்சிக்கு கடுமையான சவாலாக சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான சுதந்திரக் கட்சி உருவாகியது.
காமராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸை விட்டு வெளியேறிய ராஜாஜி, 1962 தேர்தலை முன்னிட்டு சுதந்திரக் கட்சியை உருவாக்கி காங்கிரஸை கடுமையாக எதிர்த்தார். அவரது கட்சிக்கு நட்சத்திர சின்னம் வழங்கப்பட்டது. நீல நிறக் கொடியில் நட்சத்திரம் பதித்த அந்தக் கட்சி, செல்வந்தர்கள் மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றது.
தேர்தலை முன்னிட்டு ராஜாஜி தமிழக மக்களுக்கு கடிதம் எழுதி, “காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம். சுதந்திரக் கட்சியோ அல்லது காங்கிரஸை கடுமையாக எதிர்க்கும் வேட்பாளர்களுக்கோ வாக்களியுங்கள். வலுவான எதிர்க்கட்சியே எதேச்சாதிகாரத்தை தடுக்க முடியும்” என்று அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் சோஷலிசக் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். அரசின் கட்டுப்பாடுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கின்றன என்றும், ‘லைசென்ஸ் – பர்மிட்’ முறை ஊழலை உருவாக்கும் என்றும் கூறினார்.
அதே காலத்தில் இந்தியா – சீனா போர் பதற்றமும் நிலவி வந்தது. பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் நாடு போர்சூழ்நிலையை எதிர்கொண்டிருந்ததால், தேசிய அரசியல் சூழலும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மற்றொரு முக்கிய சக்தியாக திமுக வளர்ந்து கொண்டிருந்தது. காங்கிரஸ், காமராஜ் மற்றும் நேருவை கடுமையாக விமர்சித்த திமுக, தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற சில முக்கிய அறிவுஜீவிகள், சீனப் போரின் சூழலில் நேருவின் தலைமையை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காமராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
1962 தேர்தல் முடிவில்
-
காங்கிரஸ் – 139 இடங்கள்
-
திமுக – 50 இடங்கள்
என்று முடிவுகள் வெளியாகின. இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட திமுக தலைவர் அண்ணாதுரை தோல்வி அடைந்தது அப்போது பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜாஜியின் சுதந்திரக் கட்சி மற்றும் திமுகவின் வலுவான சவால்களைத் தாண்டியும், காமராஜ் தனது தேர்தல் வியூகத்தால் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மெட்ராஸ் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இது தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
1962 Election Rajaji Dharma Yuddha Kamaraj becomes Chief Minister again despite Rajaji DMK challenges How did the Congress win in 1962