முரண்டு பிடிக்கும் காங்கிரஸ்! இறங்கி வந்த ஸ்டாலின்.. 29+2 ராஜ்யசபா சீட்? காங்கிரஸ் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
Congress is in trouble Stalin has come down 29 2 Rajya Sabha seats The important decision that Congress will take
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியாக நீடித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரி காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால் கூட்டணிக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் ஆரம்பத்தில் 36 தொகுதிகளும் 2 மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களும் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக தரப்பு கடந்த தேர்தலில் வழங்கிய 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. மேலும், மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ஆம் தேதி முடிவடைவதால், மார்ச் 3-க்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என திமுக தரப்பில் காலக்கெடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் திமுக எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு 29 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்களை வழங்க சமரசம் செய்ய முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு ராஜ்யசபா இடம் தற்போது, மற்றொன்று 2028-ல் வழங்கப்படும் என்ற திட்டமும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “திமுக எங்களுக்கு எந்த கெடும் விதிக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்பட்டதும் அறிவிப்போம்” என்றார்.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “காங்கிரஸ் கேட்பது வேறு, நாம் கூறுவது வேறு. ஆனால் கூட்டணியை சுமுகமாக முடிக்க முதல்வர் விரும்புகிறார். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் ஏற்பட்டதை காட்டுகிறது” என தெரிவித்தார்.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைமை டெல்லியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்ற கருத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் திமுக 29 தொகுதிகளும் 2 ராஜ்யசபா இடங்களும் வழங்க முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு தாமதமாகியுள்ளது. கூட்டணி தொடருமா அல்லது புதிய அரசியல் திருப்பம் ஏற்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
English Summary
Congress is in trouble Stalin has come down 29 2 Rajya Sabha seats The important decision that Congress will take