மத உணர்வுகளைப் புண்படுத்திய வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தன் மீது தொடரப்பட்ட தனிநபர் வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கை அவர் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அப்போதைய அமைச்சராக இருந்த பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அந்த மேடையில் அவர் ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பெண்கள் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியையும் இழக்க நேரிட்டது.

இந்த விவகாரத்தில், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சியின் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர், இந்த வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜார்ஜ்டவுன் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கீழ் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தலையிட மறுப்பு தெரிவித்து பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போதைய இந்தத் தீர்ப்பு பொன்முடிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court Dismisses Former Minister K Ponmudy Petition To Quash Controversial Speech Case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->