அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்கும் முதல்வர் விஜய்; தமிழக அரசியல் பண்பாட்டை மீட்டுள்ளதாக மு.வீரபாண்டியன் பாராட்டு..!
M Veerapandian Praises Chief Minister Joseph Vijay for Restoring Tamil Nadus Political Culture
தமிழகத்தின் தவெக அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் பதவியேற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், ''ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலையில் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச முடியாத நிலையை மாற்றி, தமிழக பண்பாட்டையும், மரபையும் மீட்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்தித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது'' என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

''தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
முதல்வராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலையில் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச முடியாத நிலையை மாற்றி, தமிழக பண்பாட்டையும், மரபையும் மீட்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்தித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
M Veerapandian Praises Chief Minister Joseph Vijay for Restoring Tamil Nadus Political Culture