லட்சியத்திற்காக ஒன்றிணைவோம்! மதச்சார்பற்ற தன்மையை காக்கவே நாங்கள் தற்போது தவெகவிற்கு ஆதரவு...! - ராஜேஷ்குமார் அதிரடி
Let unite cause We currently supporting tvk protect secularism Rajesh Kumar takes action
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் மாற்றச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து சில தரப்புகள் திட்டமிட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதற்கு விளக்கம் அளித்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவிப் பேராசைக்காகவும் தமிழக மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அணிகளிடமிருந்து அழைப்புகள் வந்திருந்தாலும், மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளை முன்னிறுத்தும் “இந்தியா” கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற உறுதியை காங்கிரஸ் கட்சி நிலைநிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் களமிறங்கி உழைத்ததை யாராலும் மறுக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.ஜனநாயக அமைப்பில் மக்களின் மனநிலை பல நேரங்களில் எதிர்பாராத தீர்ப்புகளை வழங்கக்கூடும்.
அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய அரசியல் எண்ணப்போக்கையும் ஜனநாயகத் தீர்ப்பையும் மதித்து, மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தன்னை மதச்சார்பற்ற இயக்கமாக முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாகவும், அக்கட்சித் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜரை தனது கொள்கை வழிகாட்டியாக ஏற்று சமூகநீதிப் பாதையில் தொடர்ந்துப் பயணிப்போம் என உறுதியளித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காமராஜரின் இலட்சியங்களையும் மக்கள் நல அரசியல் பாரம்பரியத்தையும் முன்னிறுத்தும் இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியல் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற இடமளிக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் எந்தவித சமரசமும் செய்யாது என்றும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து தமிழகத்தில் வலுவான மக்கள் நல ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் பிரதான நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக மக்களுக்கு எதிரான செயல் எனத் தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற அரசியல் குற்றச்சாட்டு மட்டுமே என்றும், மாநிலத்தின் அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை பாதுகாக்க மதவாத சக்திகளை தனிமைப்படுத்துவது காலத்தின் அவசியமாகியுள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் மதவாத அரசியலுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் சமூகநீதிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகவும் தனது அரசியல் பயணத்தை தொடரும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Let unite cause We currently supporting tvk protect secularism Rajesh Kumar takes action