பி.எம். ஸ்ரீ கல்வித் திட்டத்திலிருந்து பின்வாங்கிய கேரள அரசு!
kerala govt cpi pm shri
மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு பி.எம். ஸ்ரீ கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைய மறுத்தன. இதன் விளைவாக, அந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சர்வ சக்ஷா அபியான் (SSA) நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்தது.
இதற்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு அரசு, “நிபந்தனையுடன் நிதி என்றால், அந்த நிதியே தேவையில்லை” எனத் தெரிவித்தது. இதே போன்று கேரளாவிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதே நிலைப்பாட்டை எடுத்தது.
ஆனால் சமீபத்தில், கேரள அரசு திடீரென பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய ஒப்புதல் அளித்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநில கல்வித் துறை செயலாளர் கையெழுத்திட்டார். இந்த முடிவு வெளிவந்ததும், மார்க்சிஸ்ட் கூட்டணியின் துணைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
அதன் காரணமாக, கேரள அரசு பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மாநில அரசு, மத்திய அரசிடம் சில நிபந்தனைகளை தளர்த்த கோரி கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளது.
மத்திய அரசு அவற்றுக்கு பதில் அளிக்கும் வரை, பி.எம். ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.