அதிமுகவுடன் கூட்டணி இல்லை... தவெக இணை பொதுச் செயலாளர் பேட்டி!
Karur Stampede TVK vijay ADMK Alliance
கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதில் 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தாமாகவே முன்னிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகை நேரடியாக செலுத்தப்பட்டது. பின்னர், சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மன்னிப்பும் கேட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு வெற்றிக்கழகம் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. கட்சியின் அன்றாட பணிகளையும், ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேம்படுத்த புதிய நிர்வாகக் குழுவை விஜய் அமைத்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கான அழைப்பை தமிழக வெற்றிக்கழகம் தெளிவாக நிராகரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல்குமார், “எங்கள் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டில் தான் இன்று நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் அவர், “விஜய்யின் பிரசாரப் பயணம் தொடரும்; அனுமதிக்காக காத்திருக்கிறோம். எந்த நெருக்கடியையும் எதிர்கொள்வோம். விஜய்யின் ஆறுதல் சந்திப்பு அரசியல் நோக்கமற்றது” என்றும் விளக்கமளித்தார்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதற்கு பிறகு, பல அதிமுக அமைச்சர்கள் விஜயை கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த நிலையில், தற்போது வெற்றிக்கழகம் அதனை நிராகரித்துள்ளது.
English Summary
Karur Stampede TVK vijay ADMK Alliance