'முதல்வர் ஸ்டாலினால் தான் பெண்கள் நல ஆட்சியை நடத்த முடியும்; 'டபுள் இன்ஜின்' மாடலால் முடியாது'; கனிமொழி பேச்சு..!
Kanimozhi has criticized EPS and Modi stating that the double engine model will not work in Tamil Nadu
டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய கனிமொழி கூறியதாவது; வெல்லும் தமிழ்ப் பெண்கள் இரண்டாவது மாநாடு தஞ்சையில் எழுச்சியோடு நடத்துகிறோம். இப்போது பலரும் பல்வேறு கனவுகளோடு பல திசைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டுள்ளனர். உள்ளூரிலிருந்தும் சில படையெடுக்கிறார்கள். நமக்கு ஏதும் வாய்ப்பு கிடைக்குமா என அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இங்கு கூடியுள்ள படை அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், தமிழக மக்கள் தெளிவானவர்கள் மற்றும், அதைவிட தமிழக பெண்கள் புத்திசாலிகள் என்று கூறியுள்ளார். மேலும், வாய்ச் சவடால் விட்டு இங்கு ஆட்சி செய்ய முடியாது என்றும், முதல்வர் ஸ்டாலினால் தான் பெண்கள் நல ஆட்சியை நடத்த முடியும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

எழும், யார் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என தமிழக பெண்களுக்குத் தெரியும் என்று கூறியதோடு, ' நான் 10 ஆயிரம், 08 ஆயிரம் கொடுக்கிறேன். 'குலவிளக்கு' திட்டத்தில் 02 ஆயிரம் கொடுக்கிறேன் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று பேசியுள்ளார்.
ஆனால், யாராலும் எதுவும் வராது என தெரியும். முன்பு ஸ்கூட்டி கொடுப்பேன் என சொன்னார்கள். வந்ததா..? என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, அதுபோல குலவிளக்கும் வீட்டுக்கு வராது எனத் தெரியும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் வீட்டுக் கதவை தட்டி வரும் என்று கனிமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், விடியல் பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது என்பதை பெண்கள் உணர்ந்துள்ளனர். எனவே, இந்த மாநாடு பல கனவுகளோடு தமிழகத்தை நோக்கி வருபவர்களுக்கு அதனை தெளிவுப்படுத்தும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் 'டபுள் இன்ஜின்' என சொல்கிறார்கள். ஆனால், அது வேலை செய்யாத இன்ஜினாகத்தான் இருக்கிறது. அது ரிப்பேர் மாடல் இன்ஜினாகவும், தேறாத இன்ஜினாகவும்தான் உள்ளது என்று பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

மேலும், குஜராத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் 06 தான் உள்ளது என்றும், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் 02 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும், 01 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளதாகவும், உ.பியில் கோவிட் நேரத்தில் மக்கள் மருத்துவமனைகளுக்கு வெளியே கிடந்தனர் என்று கனிமொழி கூறியுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில்தான் நாட்டிலேயே தொழில் வளர்ச்சி அதிகம் என்றும், தமிழகத்தில் 38 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன, அதில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர் என்று கூறியதோடு, மின்னணு ஏற்றுமதி, ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம்தான் முதலிடம் என்று கூறியுள்ளார். மேலும், வேறு எந்த டபுள் இன்ஜின் ஆட்சியிலும் இந்த சாதனையை செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
டபுள் இன்ஜின் ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ளது என்றும், சமூக மேம்பாட்டு குறியீட்டில் பெரிய மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. டபுள் இன்ஜின் ஆட்சி உள்ள உ.பி, ம.பி ஆகியவை 31, 32-ஆம் இடங்களில் உள்ளன என்று கனிமொழி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Kanimozhi has criticized EPS and Modi stating that the double engine model will not work in Tamil Nadu