'ஈரானின் எரிவாயு வயல் முழுமையாக அழிக்கப்படும்'...! - கத்தார் மீதான தாக்குதலுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
Iran Gas Field Completely Destroyed Donald Trump Issues Stern Warning Against Attack Qatar
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ,“மீண்டும் கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையம் தாக்கப்படுமானால், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுமையாக அழிக்கப்படும்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘ட்ரூத் சோசியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலின் ஒரு சிறு பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கோ அல்லது கத்தார் நாட்டிற்கோ முன்னரே எந்தத் தகவலும் தெரியாது எனத் தெளிவுபடுத்திய ட்ரம்ப், எவ்விதத் தொடர்பும் இல்லாத கத்தார் நாட்டின் எல்என்ஜி மையத்தை ஈரான் தாக்கியது அநீதியானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தாது என்றும், ஆனால் ஈரான் மீண்டும் கத்தாரைத் தாக்கத் துணிந்தால் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது தனித்தோ சவுத் பார்ஸ் எரிவாயு வயலை அமெரிக்கா முழுமையாக அழிக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Iran Gas Field Completely Destroyed Donald Trump Issues Stern Warning Against Attack Qatar