பழநி நில மோசடி வழக்கு; கைதான அன்வர்தீன் சிறையில் உயிரிழந்தத்தில் சந்தேகம்: உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் புகார்..!
Complaint in the High Court regarding the death of the arrested person in the Palani land scam case in prison
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், பழநி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்தனர்.
பத்திர பதிவு மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. பத்திரப்பதிவு நடைபெற்ற சார்பதிவு அலுவலகத்தின் வழக்கமான பதிவாளர், அலுவலக உதவியாளர், மாவட்ட பதிவாளர், பொறுப்பு சார் பதிவாளர் என அனைவரிடமும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியதுள்ளது.

அத்துடன், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என குறித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பத்திரப்பதிவு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எனவே, இந்த பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அரசு வழக்கறிஞர், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், உரிய ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறதாகவும், நில பதிவு மோசடிக்கான சதித்திட்டம் கடந்த மார்ச் மாதமே தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள், பழநி கோயில் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 24க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Complaint in the High Court regarding the death of the arrested person in the Palani land scam case in prison