'பிரதமரின் பேச்சைக் கேட்டாலே பயம் வருது'...! - டெல்லிக்கு எதிராக கனிமொழி எம்பி கடும் கண்டனம்...!
Just listening Prime Minister speech makes me afraid Kanimozhi MP strongly condemns Delhi
நெல்லையில் நடைபெற்ற மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கனிமொழி எம்.பி., கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார்.அப்போது அவர் பேசியதாவது,"இன்றைய சூழலில் சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதே சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது.

குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையான பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர். இதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே செல்கிறது.எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தும் அபாய நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலைமைகள் அனைத்தும் சேர்ந்து நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.நாட்டின் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அரசு தலைவர்கள், மக்களின் அன்றாட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதை விடுத்து தொடர்ந்து கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.
மக்களை எப்போதும் ஒருவித பதற்ற சூழலில் வைத்திருக்கக்கூடிய கருத்துகளையே தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது, சாதாரண மக்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து அச்சத்தையும் குழப்பத்தையும் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, “தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கனிமொழி எம்.பி. சுருக்கமாக, “இப்போதுதான் அவர்கள் முறையாக பொறுப்பேற்றுள்ளனர்” என்று பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் மேயர் சரவணன், வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் மாலை ராஜா உள்ளிட்ட பல முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Just listening Prime Minister speech makes me afraid Kanimozhi MP strongly condemns Delhi