அதிமுகவில் முடிவுக்கு வருகிறதா உட்கட்சி மோதல்? எடப்பாடியிடம் சரண்டரான சி.வி.சண்முகம் டீம்! எடப்பாடி போட்ட கண்டிஷன்!
Is the internal conflict in AIADMK coming to an end CV Shanmugam team surrenders to Edappadi Edappadi condition
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதையடுத்து உருவான உட்கட்சி மோதல், தற்போது சமரச நிலைக்கு நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தற்போது மீண்டும் அதிமுக தலைமையுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இரண்டு அணிகள் உருவானது. ஒருபுறம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியும், மறுபுறம் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தியாளர் அணியும் செயல்பட்டு வந்தன.
தோல்விக்கான காரணங்களை விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சண்முகம் அணி வலியுறுத்தி வந்தது.
இதற்கிடையில், தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் – வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தது அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த ஆதரவுக்குப் பின்னணியில், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக எடப்பாடி தரப்பு குற்றம்சாட்டியது.
ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், வேலுமணி – சண்முகம் அணிக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. இது அந்த அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி, அவர்களிடம் இருந்த பல முக்கிய பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். இதனால் அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அவர்கள் சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மீண்டும் அதிமுக தலைமையுடன் இணைய சண்முகம் – வேலுமணி அணி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களை மீண்டும் கட்சியில் முழுமையாக ஏற்க எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெற வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த புகார் கட்சியை கைப்பற்றும் நோக்கத்தோடு அளிக்கப்பட்டது என அவர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலாக, தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து கட்சி பதவிகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று வேலுமணி – சண்முகம் அணி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களையும் இரு தரப்பும் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெறும் வகையில் அரசியல் நிலைப்பாடு மாற்றப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
அதேசமயம், “இனிமேல் பொதுக்குழு கூட்டுவது குறித்து எந்த பேச்சும் இருக்கக் கூடாது” என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிமுகவில் மீண்டும் ஒருமைப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Is the internal conflict in AIADMK coming to an end CV Shanmugam team surrenders to Edappadi Edappadi condition